பராமரிப்பு இல்லாத ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு ஆபத்து
பந்தலுார்; ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளை பராமரிப்பதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகேசன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனு:கூடலுார் வட்டத்தில் உள்ள, பாவனா நகரில் உள்ள பள்ளி உட்பட சில ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் கட்டடங்களில் மழைநீர் கசிவது, கட்டட சுவர்கள் விரிசலடைவது போன்ற பாதிப்புகள் காணப்படுகிறது. பல பள்ளிகள் டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்றி உள்ள நிலையில், மழை நீர் கசிவால், மின் கசிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.கடந்த காலங்களில் இவற்றை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து பராமரித்து வந்த நிலையில், 'தற்போது பேரூராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளின், பராமரிப்பு பணிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும்,' என, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகளிடம் நேரில் சென்று தெரிவித்தால், 'ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளை பராமரிப்பதற்கு தங்களுக்கு எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை,' என, பேரூராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது போன்ற அலட்சியம் காட்டி வருவதால், மழை காலங்களில் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியருக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டி சூழல் ஏற்படும். எனவே, பள்ளிகளில் ஆய்வு செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.