சாலையோரங்களில் வளரும் பார்த்தீனியம் செடிகள்
கூடலுார் : கூடலுார் சாலையோரங்களில் அதிகரித்து வரும் பார்த்தீனியம் செடிகளை, அகற்ற நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகத்தில், உண்ணி செடிகள், பார்த்தீனியம் உள்ளிட்ட அன்னிய தாவரங்கள் வளரும் பகுதியில், வனவிலங்குகள் விரும்பி உண்ணக் கூடிய தாவரங்கள், புற்கள் வளர்வதில்லை. இதனால், வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்துள்ளது. மேலும், பார்த்தீனியம் செடிகளின் பூக்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் சுவாசம் தொடர்பான நோய்கள், ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. முதுமலையை தொடர்ந்து, கூடலுார் குடியிருப்பு மற்றும் விவசாய தோட்டங்களில் பார்த்தீனியம் செடிகள் அதிக அளவில் காணப்படுகிறது. கோடை மழையை தொடர்ந்து, முக்கிய சாலை ஓரங்களிலும் பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் வளர துவங்கியுள்ளது.இவைகளால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'பார்த்தீனியம் செடிகளால் சுவாசம் மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க, சாலையோரங்களில் வளர்ந்துள்ள, பார்த்தீனியம் செடிகளை வேரோடு அகற்றி அழிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.