பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பயணிகள் அதிருப்தி
கூடலுார் : கூடலுார் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தினுள், நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் பயன்பாட்டில் இருந்த பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, 5.42 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனை பிப்., மாதம் பயன்பாட்டுக்கு வந்தது.பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்தும் வகையில், அதனை ஒட்டிய பணிமனை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் மாற்றப்பட்டது. ஆனால், பழைய பணிமனை பகுதியை பஸ் ஸ்டாண்டாக விரிவுபடுத்தும் பணி துவங்கப்படவில்லை. பஸ் நிறுத்துவதில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், பழைய பணிமனையில் உள்ள கட்டடங்களை அகற்றி, பஸ் ஸ்டாண்ட் விதிப்படுத்த மக்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த மாதம் பழைய பணிமனையில் உள்ள கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அப்பகுதியை பஸ் நிறுத்த பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்டுக்குள் ஒரு பகுதியில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பயணிகள் கூறுகையில், 'பழைய பணிமனையை அகற்றி பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தி இருப்பது வரவேற்க கூடியது. அதன் ஒரு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த பயன்படுத்துவதால், பஸ்கள் நிறுத்தவும், பயணிகள் நடந்து செல்லவும் இடையூறாக உள்ளது.எனவே, பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுப்பதுடன், பஸ் ஸ்டாண்டின் தரைப்பகுதியை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.