நெடுஞ்சாலைத்துறை பணியால் குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள்
பந்தலுார்; பந்தலுாரில் இருந்து சேரம்பாடி செல்லும் பகுதியில், மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தமிழக எல்லை பகுதிகள் மட்டுமின்றி, கேரளா மாநிலம், வயநாடு மற்றும் கோழிக்கோடு பகுதிகளுக்கு செல்லும் முக்கியசாலையாகவும் உள்ளது. தற்போது, மழை பெய்து வரும் நிலையில் சாலை ஓரத்தை சீரமைப்பதாக கூறி, நெடுஞ்சாலைத்துறை, பொக்லைனில் சாலை ஓரங்களில் குழிகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், சேரங்கோடு, காபிக்காடு, இரும்புபாலம் பகுதி மக்களுக்கு, ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், உடைத்து அகற்றப்பட்டு உள்ளதால் இப்பகுதி மக்கள், குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கோடை காலங்களில் சாலை ஓரங்களை சீரமைத்து, சிமென்ட் கலவை மூலம் கால்வாய் அமைக்க வலியுறுத்தி வந்த நிலையில், மழை காலத்தில் சாலை ஓரங்களை பெயர்த்து சீரமைப்பதாக கூறி வருவது வாகன ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுப்பிரமணி கூறுகையில், ''இங்கு என்ன பணி நடக்கிறது என்று தெரியவில்லை. நேரில் ஆய்வு செய்த பின்னர் இந்த பணி தேவையற்றது என்றால் நிறுத்துகிறேன்,'' என்றார். இந்த பகுதிகளை சேரங்கோடு ஊராட்சி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் ஆய்வு செய்த நிலையில், 'நெடுஞ்சாலை துறை மூலம் குடிநீர் குழாய்கள் வாங்கி அதனை முழுமையாக சீரமைத்து தர வேண்டும்,' என, தெரிவித்தார்.