புதிய அரசு கலை கல்லுாரி கோத்தகிரியில் அமைக்க மனு
குன்னுார்; தமிழக பல்கலை கழக ஆசிரியர் சங்க (மண்டலம் 7) செயலாளர் சரவணக்குமார், மாநில முதல்வருக்கு அனுப்பிய மனு:நீலகிரி மாவட்டம், குன்னுாரில் அரசு கல்லுாரி துவக்க சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரில், அறிவித்தது, வரவேற்கத்தக்கது.ஏற்கனவே, குன்னுாரில் பொன்விழா முடித்து, 59 ஆண்டுகளாக செயல்படும், பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி தற்போது தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கி வருகிறது.இங்கு, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பட்டம் பெற்று பயனடைந்துள்ளனர். இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள், மாணவிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.சமீப காலமாக, கல்லுாரியில் மாணவியர் சேர்க்கை குறைவாகவே உள்ள நிலையில், அரசு கல்லுாரியும், அடுத்த ஆண்டில் இருந்து செயல்பட துவங்கினால், இங்கு சேர்க்கை வெகுவாக குறையம். பேராசிரியர்களின் வேலை பாதிக்கப்படும். அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே, கோத்தகிரியில் புதிய அரசு கல்லுாரியை ஆரம்பித்தால், அதனை சுற்றியுள்ள மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், மகளிருக்கான பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், குன்னுார் மகளிர் கல்லுாரி பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சரவணக்குமார் கூறியுள்ளார்.