நிலம் ஆக்கிரமிப்பில் அரசியல் பின்னணி உரிமையாளர் எஸ்.பி.,யிடம் மனு நிலத்தின் உரிமையாளர் எஸ்.பி.,யிடம் மனு
பாலக்காடு: பாலக்காடு அருகே, அரசியல் பின்னணியில் நிலத்தை ஆக்கிரமித்து, உரிமையாளரையே அனுமதிக்கவில்லை என, எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்துள்ளார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகா வடகரைப்பதி எலிப்பாறையைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவர், சில ஆண்டுகளாக வேலை தொடர்பாக கோவையில் குடியிருக்கிறார்.எலிப்பாறையில் இவரது நிலத்தை, அரசியல் பின்னணியுடன் சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அருகில் வசிப்போர், நிலத்தினுள் அனுமதிப்பதில்லை என கூறி, மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரிடம் புகார் அளித்துள்ளார்.புகாரில் கூறியிருப்பது:எலிப்பாறையில் சொந்தமாக, 31 சென்ட் நிலம் உள்ளது. அதில் வீடு கட்டி குடும்பத்துடன் வசிக்க முடிவு செய்தேன். இதற்காக, நிலத்தை சர்வே செய்து கொடுக்க கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பித்தேன். நிலத்தை அளந்து எல்லையைச் சுற்றி வேலி அமைக்க சென்ற போது, நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் அருகாமையில் குடியிருப்பவர்கள் தடுத்தனர்.இதையடுத்து, சித்தூர் முன்சிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சாதகமான தீர்ப்பு பெற்றுள்ளேன். இருந்தும் நிலத்தில் நுழைய அவர்கள் அனுமதிப்பதில்லை. கொழிஞ்சாம்பாறை போலீசாரும் அரசியல் செல்வாக்குள்ள அவர்களுக்கு அடிபணிந்து எங்களை அச்சுறுத்துகிறார்கள்.நிலத்திற்கு முறையாக வரி செலுத்தி வருகிறோம். அனைத்து ஆவணங்களும் உள்ளன. இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.