சிம்ஸ் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு மலர் நாற்றுகள் நடவு
குன்னுார்; குன்னுார் சிம்ஸ் பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக இரண்டு லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவிற்கு ஏப்., மே மாதங்களில் நடக்கும் கோடை சீசனுக்கு, அடுத்தபடியாக, அக்., நவ., மாதங்களில் இரண்டாவது சீசன் நடக்கிறது. சீசனுக்காக ஆண்டுதோறும், ஜூலை மாதம் பூங்காவில் நடவு பணிகள் துவங்கும்.நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகளுடன், 2வது சீசனுக்கான நடவு பணி துவங்கியது. தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி தலைமை வகித்து, பால்சம் மலர் நாற்றுகள் நடவு செய்து பணியை துவக்கி வைத்தார்.அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட, 'சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, டேலியா, பேகோனியா, பேன்சி , டெல்பினியம், டெட்டூனியா, ஸ்டாக்ஸ், லிசியான்தஸ்,' உட்பட ,75 வகைகளில், 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. தோட்டக்கலை பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.