மலர் நாற்றுகளை பனியில் இருந்து பாதுகாக்க பிளாஸ்டிக் போர்வை
ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள், பனியால் பாதிக்காமல் இருக்க, பிளாஸ்டிக் போர்வை மூலம் பாதுகாப்பு பணி நடந்தது.சென்னையில் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக, தாவரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா மற்றும் குன்னுார் சிம்ஸ் பூங்கா உட்பட, தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, பூங்கா நர்சரிகளில் மலர் நாற்றுகள் தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது. அதில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மட்டும். 2 லட்சம் மலர் நாற்றுகள் தொட்டிகளில் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில், ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக, மேகமூட்டமான காலநிலையில் பனி பொழிவும் இருந்து வருகிறது. தொட்டிகளில் பராமரிக்கப்படும் மலர் நாற்றுகள் கருகக்கூடிய வாய்ப்புள்ளது. இதனால், பூங்கா புல் தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள, மலர் நாற்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதுடன் 'பிளாஸ்டிக்' போர்வையை கொண்டு மூடி பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.