போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பு; கால்களை இழந்த டிரைவர் காப்பீடுக்காக தவிப்பு
ஊட்டி : ஊட்டியை சேர்ந்த ஜோசப் தனது குடும்பத்தினருடன் ஆம்புலன்சில் வந்து கலெக்டரிடம் அளித்துள்ள மனு;ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகே, வி.சி., காலனி பகுதியில் வசித்து வருகிறேன். மேட்டுபாளையத்தில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தேன். கடந்த மாதம், 6 ம் தேதி கிரேன் மூலம் லாரியில் பழைய பொருட்கள் ஏற்றி கொண்டிருந்தோம். அப்போது பழைய லாரியின் பாகங்களை ஏற்றும் போது கிரேன் கொக்கி கழன்று லாரி பாகங்கள் என் மீது விழுந்து விட்டது. அதில், எனது இரு கால்களும் உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் விட்டு விட்டனர். இரு கால்களும் செயல் இழந்து போனதால் நானும் எனது குடும்பமும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.சம்பவம் குறித்து என் மனைவி மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்தார். 'தாமதமாகி விட்டது' என்று கூறி வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்து விட்டனர். காப்பீடு வாங்க முடியவில்லை. எனவே, வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.