புதுப்பொலிவு பெற்ற குன்னுார் மலை ரயில் நிலையம் அடுத்த மாதம் காணொளியில் துவக்கி வைக்கும் பிரதமர்
குன்னுார் : குன்னுார் மலை ரயில் நிலையம் ஏப்., 1ம் தேதி பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ள நிலையில், பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றது.கடந்த, 1854ல், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை மலை ரயில் பாதை அமைக்கப்பட்டு, 1899ல், போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. அப்போது குன்னுாரில் ஆங்கிலேயர்களால் ரயில் நிலையம் கட்டப்பட்டது. பழமை வாய்ந்த இந்த மலை ரயில் நிலையத்தில் இருந்து, ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த மலை ரயிலுக்கு கடந்த, 2005ல் 'யுனெஸ்கோ' அங்கீகாரம் கிடைத்தது. 'அம்ரித் பாரத்' திட்டம்
இந்நிலையில், கடந்த 2023ல், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய், மதிப்பில் இந்த ரயில் நிலையத்தை புதுப்பித்து பொலிவு படுத்தும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. அதில், சுற்றுலா பயணிகளை கவர தடுப்புச் சுவரில் 'முரல் பெயின்ட்' எனப்படும் நீலகிரியின் முக்கியத்துவத்தை பெருமையை சேர்க்கும் வகையில் 'சுவரோவியம்' வரையப்பட்டு வருகிறது. இது மட்டுமே பழைய இன்ஜின் உள்ள இடத்தில் 'ஐலவ்' குன்னுார் எனும் செல்பி ஸ்பாட் அமைக்கப்படுகிறது.ஏற்கனவே பழமை வாய்ந்த மரம் காப்பாற்றப்பட்ட இடம் மட்டுமின்றி, தடுப்பு சுவர் அமைத்த பகுதிகளில் பல்வேறு வண்ண மலர் தொட்டிகள் செடிகள் வைத்து பராமரிக்கப்படுகிறது. அதில், ஜெர்மனில் இருந்து வரவழைக்கப்பட்ட கோல்டன் சைப்ரஸ், பாக்ஸ்டைல், பிகஸ், பிகஸ் பிளாக், போகன்வில்லா குட்டை ரக மரங்கள் ரயில் நிலையம் முன்புறம் நடவு செய்யப்படும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், 'மெக்சிகன் டுவிஸ்ட், ஐவி, பால்சம், டேபிள் ரோஸ்,' உட்பட, 30 வகையில் ஆயிரகணக்கான செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நீலகிரியில் சதுப்புநிலங்களை பாதுகாக்கும் புல் வகையும் நடவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதமர் மோடி, வரும் ஏப்., 1ம் தேதி குன்னுார் மலை ரயில் நிலையம் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களை துவக்கி வைக்க உள்ளார். இதனால், மலை ரயில் நிலையம், புதுப்பொலிவு படுத்தும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.