அரசு பஸ்கள் இயங்கும் நேரத்தில் தனியார் பஸ்களுக்கு அனுமதி
பந்தலுார் : நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது தனியார் மினிபஸ்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதில், பந்தலுாரில் இருந்து கொளப்பள்ளி வழியாக தாளூர் பகுதிக்கு இயக்கப்படும், தனியார் மினி பஸ் கால அட்டவணையால், அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. காலை, 7:30, 10:30; மதியம், 2:15, 3:30; மாலை, 6:10 ஆகிய நேரங்களில் பந்தலுார் வழியாக தாளூர் பகுதிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில், தனியார் மினி பஸ்கள் அரசு பஸ்கள் செல்லும், 15 நிமிடங்களுக்கு முன்பாக இயக்கப்படும் வகையில் கால அட்டவணை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசு பஸ்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டு நாளடைவில், இதனையே காரணம் கூறி அரசு பஸ்களை நிறுத்தும் நிலை உருவாகும். எனவே, கால அட்டவணையை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.