உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விதை ரகங்களை சரியான பருவத்தில் வளர்த்தால் லாபம்; வேளாண்மை ஆராய்ச்சி கழக தலைவர் தகவல்

விதை ரகங்களை சரியான பருவத்தில் வளர்த்தால் லாபம்; வேளாண்மை ஆராய்ச்சி கழக தலைவர் தகவல்

ஊட்டி : 'எதிர்ப்பு சக்தி கொண்டுள்ள உருளை கிழங்கு விதை ரகங்களை சரியான பருவத்தில் வளர்ப்பது விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும்,'என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டி அருகே முத்தோரையில் உள்ள, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம்; மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில், தரமான விதை உருளைக்கிழங்கு உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சியை கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்து பேசியதாவது:நீலகிரி விவசாயிகள் இரு கால பயிர்களுக்கு இடையே குறைந்த கால இடைவெளியில் பயிரிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்பயிற்சி வகுப்புகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். விவசாய உற்பத்தி பெருக்குவதற்கு இயற்கை முறை விவசாயத்தை பின்பற்ற வேண்டும். மண் வளம் குறித்து தொடர்ந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.பயிற்சியில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை உடனடியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விதைகளின் தரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நல்ல லாபம் ஈட்டலாம்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக நிலையத்தின் தலைவர் பிரியங்க் ஹனுமான் மாத்ரே பேசுகையில், ''நீலகிரிக்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களின் முக்கியத்துவம் மற்றும் உருளை கிழங்கு விதை தண்ணிறைவு பெறுவதற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும். இந்த நிறுவனத்தின் மூலமாக, 'குப்ரீ ஜோதி, குப்ரீ ஸ்வர்ண, ஜூ பிரீ, குப்ரீ ஹிமாலினி, குப்ரீ சஹ்யத்ரி, குப்ரீ கரன்,' விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். அதில், 'குப்ரீ கரன், குப்ரீ ஹிமாலினி மற்றும் ஜூப்ரீ கிரிதாரி,' ரகங்கள் பின் இலை கருகு நோய்க்கு எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், 'குப்ரீ ஸ்வர்ண மற்றும் குப்ரீ சஹ்யத்ரி' ரகங்கள், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாகவும் இந்த ரகங்களை சரியான பருவத்தில் வளர்ப்பது விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும்,'' என்றார்.இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய தலைவர் சோமசுந்தரம்,தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை