உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மறியல் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பு

 மறியல் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே, கடலைக்கொல்லி பகுதியில், தாயகம் திரும்பிய தமிழர்கள், 33 பேருக்கு, அப்போதைய அரசு தலா ஒரு ஏக்கர் வீதம் இடம் ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கியது. ஆனால், இந்த நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில், இது குறித்து 1980 ம் ஆண்டு நீதிமன்றத்தில், பட்டாதாரர்கள் வழக்கு பதிவு செய்தனர். அதில் நான்கு பேர் மட்டுமே இறுதிவரை நீதிமன்றத்தில், வழக்கு நடத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான்கு பேருக்கும் தலா ஒரே ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க கூடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒதுக்கப்பட்ட நிலத்தில் பழங்குடியின மக்கள் உள்ளிட்ட சிலர் வீடு கட்டியும் விவசாயம் செய்தும் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை நிலத்தின் பட்டாதாரர்கள் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். வீடு கட்டி குடியிருந்து வரும் தங்களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி, பழங்குடியின மக்கள் குந்தலாடி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !