யானையை கண்டு ஓட்டம்; ரயில்வே பணியாளர் காயம்
குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், காட்டு யானையை கண்டு பயந்து ஓடிய 'டிராக்மேன்' விழுந்து காயமடைந்தார். குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதை மற்றும் மலை ரயில்பாதையில் காட்டு யானைகள் தனித்தனியாக உலா வருகிறது. இந்நிலையில், குன்னுார்-- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், நேற்று முன்தினம் மாலையில் வடுகதோட்டம் பகுதியில், குட்டியுடன் மூன்று யானைகள் முகாமிட்டு இருந்தன. அப்போது,'ஹில்குரோவ்' பகுதியில் இருந்து, பணியை முடித்து திரும்பிய, டிராக் மேன்கள் ரோகித்சிங்,30, சோமன் ஆகியோர், வடுக தோட்டம் சிமென்ட் சாலை அருகே வந்த போது, மரத்தின் பின் பகுதியில் இருந்த யானை இறங்குவதை கண்டதால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். அதில், பாசி படர்ந்த நடைபாதையில் வழுக்கி விழுந்து, சோமன் சிங் காயமடைந்தார். தொடர்ந்து, குன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆய்வு செய்த வனத்துறையினர் கூறுகையில்,'இந்த பகுதிகளில் சாந்தமான முறையிலேயே இதுவரை யானைகள் நடமாடி வருகிறது. பணியை முடித்து வரும்போது அருகில் இருந்த யானைகளை கவனிக்காததால் இந்த நிலை ஏற்பட்டது. இது போன்ற பகுதிகளில் பணிக்கு செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என்றனர்.