மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி
கோத்தகிரி; கோத்தகிரி -மேட்டுப்பாளையம் சாலையில் மழைநீர் கால்வாய் துார்வாரும் பணியில் நெடுஞ்சாலைத்துறை தீவிரம் காட்டி வருகிறது. கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை, மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டு, வளைவுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், வளைவுகள் குறைந்த இச்சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில், மழைநீர் வழிந்தோட ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் துார் வாரப்படாமல் உள்ளது. மழை நாட்களில், தாழ்வான பகுதியில் கால்வாய் அடைபட்டுள்ளதால், சாலையின் மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், சாலை சேதம் அடைவதுடன், துண்டிக்கும் அபாயமும் உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு குஞ்சப்பனை பகுதியில், சாலை துண்டித்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இனிவரும் நாட்களில் மழை நீர் தீவிரமடை யும் என்பதால், மழைநீர் கால்வாயை துார் வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சங்கர்லால் ஆலோசனைப்படி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில், கட்டபெட்டு பஜாரில் இருந்து, குஞ்சபனை வரை கால்வாய் துார்வாரப்பட்டு வருகிறது. இப்பணி, நிறைவடையும் பட்சத்தில், மழை நாட்களில், சாலை துண்டிப்பு உட்பட அசம்பாவிதம் தவிர்க்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.