உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பூமியை நெருங்கி வரும் வால் நட்சத்திரம் அறிவியல் கருத்தரங்கில் அரிய தகவல்

 பூமியை நெருங்கி வரும் வால் நட்சத்திரம் அறிவியல் கருத்தரங்கில் அரிய தகவல்

கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) விஜயகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: இந்த வாரத்தில், '31/ அட்லஸ்' என்ற வால் நட்சத்திரம், பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாகவும், பூமியில் இருந்து, 30 கோடி கி.மீ., தொலைவில் இந்த வால் நட்சத்திரம் பயணிப்பதால், பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் வெளிப்புறமாக 'ஊர்ட்ஸ்' மேகம் பகுதியில் கோடிக்கணக்கான வால் நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில், ஏதாவது ஒன்று சூரியனுக்கு மிக அருகில் வரும் போது, அது வால் நட்சத்திரமாக மாறுகிறது. ஒரு ஐஸ் பந்து போன்ற வால் நட்சத்திரம், சூரியனுக்கு அருகில் வரும் போது, அதை சுற்றியுள்ள பனி உருகி, நீண்ட வால் போன்ற அமைப்பை பெறுகிறது. அதன் மையப்பகுதி ஒரு பாறாங்கல் அ மைப்பை பெற்றுள்ளது. அதில் இருந்து கிளம்பும் வால் பகுதி சூரியனுக்கு எதிர் திசையில் நீண்டு செல்லும். இந்த வால் நட்சத்திரத்தின் வால், பல கோடி கி.மீ., வரை நீடிக்கும். தற்போது, பூமியை நெருங்கி வரும், '31/அட்லஸ்' என்ற வால் நட்சத்திரம், பால்வெளி மண்டலத்தில் உள்ள சஜிடீரியல் நட்சத்திர மண்டலம் அதாவது, தனுசு ராசி எனப்படும் பகுதியில் இருந்து பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த வால் நட்சத்திரம், சூரியனை விட பழமையான ஒரு நட்சத்திரத்தில் இருந்து, மணிக்கு, 2 லட்சம் கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி வருவதாக, விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் இருந்து, எட்டு மடங்கு கார்பன் டை ஆக்சைடு நீண்ட ஆவி வடிவில் வெளிப்படுகிறது. தவிர, நிக்கல் மற்றும் ஹைட்ரஜன் சயனைடு போன்ற வேதி பொருட்களும் இதில் இருந்து வெளிப்படுவதாக, சிலி நாட்டில் அமைந்துள்ள உலகில் மிகப்பெரிய தொலைநோக்கி யான வேரா ரூபின் டெலஸ்கோப் மையம் அறிவித்துள்ளது. குவாண்டம் அறிவியல், இந்த பிரபஞ்சத்தில் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளும், கருப்பு துகள்கள் மற்றும் அவற்றில் செயல்படும் கருப்பு ஆற்றல் காரணமாகத்தான் நடைபெறுகின்றன என கூறுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். ஆசிரியர் சவுத்ரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ