ஏலமன்னாவில் அபாய மரங்கள் அகற்றம்: வாகன ஓட்டிகள் நிம்மதி
பந்தலூர்: ஏலமன்னா பகுதியில் ஆபத்தான மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர். பந்தலூர் அருகே ஏலமன்னா சாலையோரம் பழங்குடியின மக்கள் குடியிருப்புகள் உள்ளது. கொளப்பள்ளி- , ஊட்டி, கூடலூர் மற்றும் பந்தலூர் -சுல்தான்பத்தேரி சாலை அமைந்துள்ளது. சாலையோரம் ஆபத்தான மரங்கள் இருந்தது. மழை, பலத்த காற்றின் போது சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழங்குடியின குடியிருப்பு அமைந்துள்ள நிலையில், ஆபத்தான மரங்களை அகற்ற வாகன ஓட்டுனர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வலியுறுத்தினர். இந்த பகுதியை சமீபத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா நேரில் ஆய்வு செய்தார். ஆபத்தான மரங்களை உடனடியாக அகற்ற, மாவட்ட வன அலுவலரிடம் அறிவுறுத்தினார். நேற்று, ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் அகற்றும் பணி நடந்து வருவதால் பழங்குடியின மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.