பராமரிப்பின்றி உள்ள வேட்டை தடுக்கும் முகாம் சீரமைத்தால் கண்காணிப்பு பணிக்கு பெரும் பயன்
கூடலுார்: கூடலுார் கீழ்நாடுகாணி அருகே, மலையில், பராமரிப்பின்றி காணப்படும் வேட்டை தடுப்பு முகாமை சீரமைத்தால் பயன் ஏற்பட வாய்ப்புள்ளது.கூடலுார் பகுதியில், குற்றங்களை தடுக்க வனப்பகுதியில் வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், பல வேட்டை தடுப்பு முகாம்கள் பராமரிப்பின்றி பயனற்று காணப்படுகிறது.இந்நிலையில், மீண்டும் புதிய வேட்டை தடுப்பு முகாம்களை வனத்துறையினர் அமைத்துள்ளனர். அதில் சில வேட்டை தடுப்பு முகாம்களில் மட்டும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கூடலுார், நாடுகாணி, ஓவேலி, குண்டம்புழா வன பகுதியை கண்காணிக்க, கீழ்நாடுகாணி, மலையில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வேட்டை தடுப்பு முகாம், தற்போது பயன்படுத்தாமல் பராமரிப்பின்றி பயனற்று கிடக்கிறது. இதனை சீரமைத்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில், 'வனப்பகுதியை கண்காணித்து வன குற்றங்களை தடுக்க, ஏற்கனவே அமைக்கப்பட்ட பல வேட்டை தடுப்பு முகாம்கள் பராமரிப்பு இன்றி, பயன்படுத்த முடியாத நிலையில்உள்ளது.அதில், கீழ்நாடுகாணி உள்ள வேட்டை தடுப்பு முகாமும் ஒன்று. புதிய வேட்டை தடுப்பு முகாம்களை அமைக்கும் வனத்துறையினர், பராமரிப்பின்றி கிடக்கும் வேட்டை தடுப்பு முகாம்களை சீரமைத்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.