ஈட்டி மர பாதுகாப்பு சட்டம் ரத்து: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
கூடலுார்::தமிழகத்தில், 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த ஈட்டி மர பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்திருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மரங்களில் மிகவும் உறுதி வாய்ந்த, 'ரோஸ்வுட்' எனப்படும் ஈட்டி மரங்கள் தமிழகத்தில், நீலகிரி மாவட்டம், கூடலுார், ஆனைமலை, ஜவ்வாது மலை, சேர்வராயன், கொல்லிமலைகளில் இயற்கையாக வளர்ந்து காணப்படுகின்றன.இவை நீடித்து உழைக்க கூடியவை. இதன் தேவையும், விலையும் அதிகம் என்பதால், நீலகிரியில் உள்ள மரக்கொள்ளையர்கள், இதை அதிகளவில் வெட்டி கடத்தினர்.இதை பாதுகாக்க, 1995ல் சட்டம் கொண்டு வந்து 15 ஆண்டுகள் நடைமுறைப்படுத்தினர். 2010ல், மேலும் 15 ஆண்டுகளுக்கு சட்டத்தை நீட்டிப்பு செய்தனர். இதனால், நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் வனப்பகுதிகளில் ஈட்டி மரங்களை வெட்ட, மர கொள்ளையர்கள் அச்சமடைந்தனர். மரம் வெட்டி கடத்தப்படுவது தடுக்கப்பட்டது.நடப்பாண்டு இந்த சட்டம் காலாவதியான நிலையில், இந்த சட்டத்தை ரத்து செய்துள்ளனர். இதனால், நீலகிரி உட்பட மாநிலம் முழுதும் ஈட்டி மரம் கடத்தல் அதிகரிக்கும் என்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் வேணுகோபால் கூறுகையில், “ரோஸ்வுட் பாதுகாப்பு சட்டத்தால், கூடலுார் பகுதியில் ஈட்டி மரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த சட்டம் ரத்தால், ஈட்டி மரங்களை எளிதாக வெட்டி, தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு கடத்தும் வாய்ப்புள்ளது. ''இதை தடுக்க, இந்த சட்டத்தை மேலும் நீட்டிக்க வேண்டும். மேலும், பட்டா நிலங்களில் ஈட்டி மரங்களை வளர்த்து, வெட்டுவது தொடர்பான புதிதாக தனிச்சட்டம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.