மழை பாதிப்பு பகுதியில் வருவாய் துறை நிவாரணம்
பந்தலுார் : பந்தலுார் 'இன்கோ' நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமாரி. இவர் வீட்டின் அருகே இருந்த பாக்கு மரம் முறிந்து வீட்டு கூரையில் விழுந்தது. அதில், வீட்டு மேற்கூரை பாதிக்கப்பட்டது. இதேபோல, உப்பட்டி பகுதியில் சாரதா என்பவரின் வீட்டு சுவர், மழையால் இடிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வருவாய்த்துறை சார்பில், தலா, 8 -ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரிடர் மீட்பு கண்காணிப்பு அலுவலர் சுரேஷ் கண்ணன், தாசில்தார் சிராஜுநிஷா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், தலைமையிட துணை தாசில்தார் விஜயன், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.