உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மந்தமான காலநிலையால் கொப்புள நோய் அபாயம்; தேயிலை மகசூல் பாதிக்கப்படும் சூழ்நிலை

மந்தமான காலநிலையால் கொப்புள நோய் அபாயம்; தேயிலை மகசூல் பாதிக்கப்படும் சூழ்நிலை

கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோயின் அபாயம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இத்தொழிலை, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள், இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நம்பியுள்ளனர். தொடரும் மழையால், விவசாயிகள் தோட்டங்களில் உரம் இட்டு பராமரிப்பு செய்துள்ள நிலையில், அரும்பு துளிர்விட்டு, பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 16 முதல், 20 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப விலை கிடைத்து வருகிறது. இடுப்பு பொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக இருப்பதால், தற்போது கிடைத்து வரும் விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. இருப்பினும், பொருளாதார நெருக்கடிக்கு இடையே, விவசாயிகள் குடும்பங்களை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், வானம் தொடர்ந்து மேகமூட்டமாக மந்தமாக காணப்படுகிறது. பசுந்தேயிலை செழித்து வளர வேண்டும் எனில், மழையுடன் போதிய சூரிய வெளிச்சம் தேவையாக உள்ளது. தொடர்ந்து மேகமூட்டமான காலநிலை நிலவுவதால், பசுந்தேயிலை வளர்ச்சி பாதித்து வருகிறது. இதே காலநிலை நீடித்தால், தயாரான பசுந்தேயிலையில் பரவும் 'கொப்புள' நோயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தரமான பசுந்தேயிலை கூட தரம் குறைந்து, விலை சரிவதற்கான வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில்,' தொடரும் மேகமூட்டமான காலநிலையால், தேயிலையில் ஆங்காங்கே கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகள் குறித்து தேயிலை வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி