உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலைப்பாதையில் ஆபத்தான பகுதியில் சாலை விரிவாக்க பணி; போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் சீரமைப்பில்லை

மலைப்பாதையில் ஆபத்தான பகுதியில் சாலை விரிவாக்க பணி; போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் சீரமைப்பில்லை

குன்னுார்; குன்னுார் மலை பாதையில், குறுகலான சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைதுறை, ஏற்கனவே விரிவாக்கம் செய்த இடத்தில், ஆபத்தான பகுதியில் மீண்டும் மண் தோண்டப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில், 16 கோடி ரூபாய் மதிப்பில், 3வது கட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. அதில், 'டபுள் ரோடு' அருகே ஏற்கனவே விரிவாக்கம் செய்த இடத்தில், இரு பொக்லின் பயன்படுத்தி செங்குத்தாக மண் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே விரிவாக்கம் செய்த எதிர்புற இடத்தில் புற்கள் முளைத்துள்ளது. இதனால், வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதுடன், விபத்தும் நடந்து வருகிறது. அந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை.டிரைவர்கள் கூறுகையில்,'குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், பர்லியார் உட்பட சில இடங்களில் விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், இந்த பகுதியில் இரு கனரக வாகனங்கள் சென்றாலே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவற்றை சீரமைக்காமல், டபுள் ரோடு பகுதியில் ஏற்கனவே விரிவாக்கம் செய்த இடம் மீண்டும் அகலப்படுத்தப்படுகிறது. இது போன்று விரிவாக்கம் செய்த இடத்தில் சமீப காலமாக ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படுகிறது. சாலை வரியை முறையாக வசூலிக்கப்படும் நிலையில் ஆண்டு கணக்கில் இந்த சாலையை சீரமைக்காமல் உள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது,' என்றனர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,'டபுள் ரோடு பகுதியில் யானைகள் வந்து செல்லும் இடத்தில், 60 அடி உயரத்திற்கு மேல் மண் தோண்டப்படுவதுடன், மரங்களும் அகற்றப்படுகிறது. சாலையின் நடுவே இருந்த மரம் அகற்றாமல் சாலை சீரமைத்த நிலையில் இங்கு மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. வனத்துறையினரும் கண்டு கொள்வதில்லை. இப்பகுதிகளில் மழைகாலத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்,' என்றனர்.தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறுகையில்,'இங்கு 'எஸ்' போன்ற வளைவு என்பதால் விபத்துகள் தவிர்க்க இங்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. பர்லியார் பகுதியில் பணிகள் நடக்காத பகுதியில், அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்த பிறகு சீரமைக்கப்படும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை