சாலையில் தண்ணீர் பாய்ச்சும் பணி
பந்தலுார் : பந்தலுார் பஜாரில் சாலையில் அதிகரிக்கும், துாசு மண்டலத்தை தவிர்க்க, நகராட்சி மூலம் சாலை முழுவதும் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. பந்தலுார் பஜாரில் சாலை முழுமையாக சேதம் அடைந்து குழிகளாக மாறியது. நெடுஞ்சாலை துறை மூலம் 'ரெடிமேட்' தார் கலவை கொண்டு குழிகள் சரி படுத்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே கொட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மற்றும் பாறை துகள்கள் சாலையில் சிதறி கிடக்கிறது. இதனால், சாலையில் வாகனங்கள் சென்று வரும் போது, துாசு மண்டலமாக மாறி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நேற்று விடுமுறை என்பதால் சாலை ஓரத்தில் வியாபாரிகள் அதிகளவில் காணப்பட்டனர். இவர்களுக்கான பாதிப்பை தவிர்க்கும் வகையில், நேற்று காலை முதல் நகராட்சி மூலம் சாலையில் தண்ணீர் பாய்ச்சும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், துாசு பாதிப்பில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தப்பினர்.