பசுந்தேயிலைக்கு ரூ.30 ஆதார விலை: விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்
கோத்தகிரி: கோத்தகிரியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தும்பூர் போஜன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் காரி கவுடர் சதீஷ் பெள்ளன், ஆண்டி கவுடர் மற்றும் அருணா நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்: மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கம் துவக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பொன் விழாவை, அக்., 5ம் தேதி சிறப்பாக கொண்டாடுவது; 'பசுந்தேயிலைக்கு, 30 ரூபாய்க்கு மேல் ஆதார விலை கிடைக்க வேண்டும்,' என, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வரும் எம்.பி., வாசனுக்கு நன்றி தெரிவிப்பது; தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையை வழங்காமல் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் குறைத்து விலை வழங்குவதை வாரியம் தலையிட்டு விவசாயிகளுக்கு நிர்ணய விலையை பெற்று தர வேண்டும்; வனவிலங்கு தொல்லையால் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்கவும், தெரு நாய் மற்றும் வன விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உட்பட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகி மணிகண்டன் நன்றி கூறினார்.