துாய்மை பணியாளர்கள் ஊட்டியில் திடீர் போராட்டம்
ஊட்டி: ஊட்டியில் தற்காலிக ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊட்டி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில், 100 தற்காலிக துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 'இவர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை; பி.எப்., பிடித்தம் செய்து, பணி நிரந்தரம் செய்யவில்லை,' என்பன உள்ளிட்ட, பல கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் இதுவரை நிற்வேற்றவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த துாய்மை பணியாளர்கள் நேற்று காலை, 6:30 மணியில் இருந்து, 10:30 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகம் அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் பணி இருப்பதால், இப்பணி நிறைவடைந்தவுடன், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதியளித்தனர். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால், ஊட்டி தேர்திருவிழாவின் போது குவிந்த குப்பையை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.