ஐ.ஐ.டி.,யில் அறிவியல் முகாம்
பாலக்காடு, ; பாலக்காடு ஐ.ஐ.டி., யில், பிளஸ் -1 மாணவர்களுக்கான அறிவியல் முகாம் துவங்கியது.கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி., வளாகத்தில், இயற்பியல் துறையில் பேராசிரியராகவும் மாணவர் டீனாகவும் இருந்த முனைவர் வத்சகுமார் நினைவாக, பிளஸ்- 1 மாணவர்களுக்கான அறிவியல் முகாம் நேற்று துவங்கியது.'வத்சாவுடன் பயணத்தை தொடருங்கள்' என்ற தலைப்பில், 10 நாட்கள் நடக்கும் முகாமை, பாலக்காடு ஐ.ஐ.டி., இயக்குனர் சேஷாத்திரி சேகர் துவக்கி வைத்தார்.இந்திய விண்வெளி அறிவியல் நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் பிரவீன் கிருஷ்ணா கலந்து கொண்டு பேசினார். இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் உமா திவாகரன், பேராசிரியர் வத்சகுமார் குறித்து நினைவுரையாற்றினார். கணிதத் துறை உதவிப் பேராசிரியர் ரோஹித் வர்மா கலந்து கொண்டு பேசினார்.கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் ஆர்வம், திறன் மற்றும் விமர்சன சிந்தனையை வளர்ப்பதே இந்த முகாமின் நோக்கம். மாணவர்கள், ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு தளமாக இந்த முகாம் இருக்கும். அறிவியல், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான அமர்வுகள், சோதனை அமர்வுகள் மற்றும் புதிர்கள் ஆகியவையும் இந்த முகாமில் இடம் பெற்றுள்ளன, என, ஐ.ஐ.டி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.