செக்சன்-17 நிலம்! குடியிருப்பவர்களின் விபரங்களை பதிவு செய்யும் பணி; தேர்தலுக்கான நாடகம் நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டு
பந்தலுார்: கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், செக்சன்-17 நிலத்தில் குடியிருப்பவர்கள் விபரங்களை, அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகள், ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு நிலம்பூர் கோவிலகம், மைசூர் மகாராணி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்தன. 1969ல் ஜென்ம ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு, இவர்கள் வசம் இருந்த, 80.88 ஆயிரம் ஏக்கர் ஜென்ம நிலப்பகுதி, 1974-ல் அரசுடமை ஆக்கப்பட்டது. அதில், 'குத்தகை அடிப்படையில் இருந்த நிலம், வனப்பகுதிகள்; வருவாய் துறைக்கு செந்தமான நிலம்,' என, பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. அதில், 52 ஆயிரம் ஏக்கர் நிலம், செக்சன்-17 என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டு, வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அதில், தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் தவிர, பல ஏக்கரில் மக்கள் குடியிருந்து வருவதுடன் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால், தொடரும் பிரச்னைகள் தொடர்பான, வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து,'இந்த நிலப்பகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக் கூடாது,' என, கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், அதிக அளவு நிலங்களை உள்ளடக்கிய, ஓவேலி பகுதி சர்ச்சைக்குரிய பகுதியாக மாறி உள்ளது. அதில், 'குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்,' என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போது, தேர்தலுக்கு முன்பு, வருவாய் துறை அதிகாரிகளை வைத்து, செக்சன்-17 நிலங்களில், குடியிருப்பவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருவது வழக்கம். இந்த பணிகள் தேர்தல் வாக்குறுதிகளிலும் இடம் பெற்று, ஆட்சி அமைந்த பின்பு எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் போய்விடும். முதல்வர் வருவதற்கு முன்பு ஆய்வு
இந்நிலையில், மாநில முதல்வர் ஸ்டாலின், கடந்த, 5ம் தேதி ஊட்டிக்கு வருவதற்கு முன்பு, மார்ச் 26 ல் நிலவரித் திட்ட இயக்குனர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் அதிகாரிகள் செக்சன்-17 நிலப்பகுதியில் ஆய்வு செய்து சென்றனர். இதனால், மக்கள் முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில், நிலப்பிரச்னைக்கு தீர்வு காண அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், எந்த அறிவிப்பும் வரவில்லை. தற்போது, மீண்டும், சில நாட்களாக வருவாய் துறையினர், தனி படிவத்தில் செக்சன்-17 நிலத்தில் குடியிருப்பவர்களின் விபரங்களை, 24 வகை கேள்விகள் கேட்கப்பட்டு பதிவு செய்து செல்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த, 50 ஆண்டுகளாக நிலவி வரும் இந்த நில பிரச்னைக்கு, மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணாமல், தேர்தலின் போது மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன் விவரங்களை மட்டுமே பதிவு செய்து செல்கின்றனர். தேர்தலுக்கு முன்பாக, குடியிருப்புகளுக்கு அரசு பட்டா வழங்கி மின் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.
அறிக்கை அனுப்ப முடிவு
மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கூறுகையில், ''ஓவேலி உள்ளிட்ட கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில், செக்சன்-17 நிலங்களில் உள்ள பெரிய கட்டடங்கள் மற்றும் ஏழை மக்களின் குடியிருப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அனுப்பி அதன் மூலம் ஏழை மக்கள் பயன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.