படிக்கும் வயதில் சுயதொழில்; மாணவர்களுக்கு அறிவுரை
பந்தலுார்; பந்தலுார் அருகே 'டியூஸ்' பள்ளி வளாகத்தில், தேசிய பசுமை படை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு சுய தொழில் குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுசீந்திரநாத் வரவேற்றார். நிகழ்ச்சியில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் வகுப்பறைகளில் மட்டுமே பாடங்களை கவனிக்கின்றனர்.அதன்பின்பு, பெரும்பாலான மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்து சென்ற பின்பு, மொபைல் போன்களில் தங்கள் நேரத்தை வீணடித்து வருகின்றனர். இதனால், தேர்வுகளில் சாதிக்க முடியாமல், எதிர்கால வாழ்வே கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. இந்நிலையில், மாணவர்கள் படிக்கும் வயதில், சிறிய அளவிலான சுய தொழில்களை, கற்று கொள்வதன் மூலம் படிக்கும் போதும், படித்த பின்னரும் தொழில் முனைவோராக மாற முடியும். இதன் மூலம் அனைவரும் அரசு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி, தங்கள் சமுதாயத்தை வளமுள்ளதாக மாற்றிக்கொள்ள இயலும்,'' என்றார்.தொடர்ந்து, காளான் வளர்ப்பு, மெழுகுவர்த்தி மற்றும் பினாயில் தயாரித்தல், இயற்கை முறையிலான சோப்பு தயாரித்தல் குறித்த செயல் விளக்க பயிற்சியினை, மாநில அளவிலான பயிற்சியாளர் ஆரோக்கியசாமி அளித்தார். மேலும், 'கேரட், பீட்ரூட், கொய்யா, இஞ்சி, ஆலோவேரா,' ஆகியவற்றின் மூலம் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்தல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சியில், 'டியூஸ்' பள்ளி, புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, உப்பட்டி எம். எஸ்.எஸ்.பள்ளி, தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பழங்குடியினர் பள்ளி, பாக்கனா ஐ.எம்.எஸ். பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.