பூங்கா நடைபாதையில் கடைகள்; சாலையில் நடக்கும் சுற்றுலா பயணிகள்
ஊட்டி ; ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையோர நடைபாதையில், கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் சாலையில் நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சராசரியாக, ஒரு நாளுக்கு, 5,000 முதல், 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வார இறுதி நாட்களில், 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சாலை ஓரத்தில், நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல இடையூறாக, கடைகள் வைக்கப்பட்டுள்ளன.இதனால், சுற்றுலா பயணிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நகராட்சி நிர்வாகம் சமீபத்தில், 50 கடைகள் கட்டி, வாடகைக்கு விட்டுள்ளது. எனினும், சிறு வியாபாரிகள் சிலர், பொருட்களை நடைபாதையில் தற்போதும் கடை வைத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் சாலையில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் ஆய்வு செய்து, சுற்றுலா பயணிகள் இடையூறு இல்லாமல் நடக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.