உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு மருத்துவமனையில் ஆறு சிறப்பு டாக்டர்கள் கூடலுார் மக்களுக்கு மகிழ்ச்சி

அரசு மருத்துவமனையில் ஆறு சிறப்பு டாக்டர்கள் கூடலுார் மக்களுக்கு மகிழ்ச்சி

கூடலுார்; கூடலுார், மாவட்ட அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், தற்போது ஆறு டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கூடலுார், பந்தலுார் பகுதிகள் பழங்குடியினர், அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நம்பி உள்ளனர். இந்நிலையில், 2022ல் ஊட்டியில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை துவங்கப்பட்டதை தொடர்ந்து, கூடலுார் தாலுகா அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டது.தொடர்ந்து, 31 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு, 14 டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.இங்கு தலைமை டாக்டர் உள்ளிட்ட சில டாக்டர்கள் தவிர பெரும்பாலான டாக்டர்கள் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்தனர். கடந்த ஆண்டு அரசு ஒப்பந்த காலத்தில் ஓராண்டாக மாற்றியது. ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த முதுநிலை டாக்டர்கள் கடந்த ஆண்டு தங்களை விடுவித்து சென்றனர்.இதனால், கடந்த ஏழு மாதமாக, தலைமை டாக்டர் உட்பட 4 டாக்டர்கள் பணியாற்றி வந்தனர். டாக்டர்களுக்கு பணி சுமை அதிகமானது. நோயாளிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். டாக்டர் காலி பணியிடங்களை நிரப்ப மக்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், காலியாக இருந்த மகப்பேறு மயக்க மருந்து, குழந்தைகள் சிறப்பு டாக்டர்கள் தலா இரண்டு பேர் வீதம், புதிதாக ஆறு டாக்டர்கள், இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணி நியமித்து பணியாற்றி வருகின்றனர்.பொது மக்கள் கூறுகையில், 'இதேபோன்று, காலியாக உள்ள அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிறப்பு பிரிவுகளுக்கும் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ