மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு தீர்வு! அணையிலிருந்து தண்ணீர் எடுக்க ரூ.23 கோடியில் திட்டம்
ஊட்டி; ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மாநில அரசு, 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.ஊட்டி அருகே கால்ப் கிளப்பில் அரசு மருத்துவமனை மற்றும் பட்பயர் பகுதியில் அரசு மருத்துவ கல்லுாரி ஆகியவை, மத்திய, மாநில அரசு பங்களிப்போடு, 490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. மருத்துவ கல்லுாரி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. மருத்துவமனையை கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 700 படுக்கை வசதி
தற்போது, மருத்துவத்துறை கட்டமைப்பு நிறைவு பெற்ற மாவட்டமாக நீலகிரி உள்ள நிலையில், 700 படுக்கைகள் கொண்ட முதல் அரசு மருத்துவமனையாக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது.இங்கு , எம்.ஆர்.ஐ. சிடி., ஸ்கேன் , டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 12 அறுவை சிகிச்சை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.தவிர, பழங்குடியினருக்காக பிரத்யேகமாக, 50 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில், '20 படுக்கைகள் ஆண்களுக்கும், 20 படுக்கைகள் பெண்களுக்கும் , குழந்தைகள் மகப்பேறுக்கு , 10 படுக்கை,' என, பழங்குடியின மக்களுக்கு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தொடரும் தண்ணீர் பிரச்னை
இங்குள்ள மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை, குடியிருப்புகள் மற்றும் விடுதிகளுக்கு பல லட்சம் லிட்டர் குடிநீர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால், குடிநீர் வசதி முழுமை பெறாமல் மருத்துவ கல்லுாரி திறக்கப்பட்டது. தற்போது நகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில்,குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக ஏற்கனவே அரசிடம் நிதி கோரி, மாவட்ட நிர்வாகம் வாயிலாக கருத்துரு அனுப்பப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக, மருத்துவ கல்லுாரி மாணவர்கள் குடிநீர் வசதியின்றி அவதி அடைந்து வந்தனர். மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த போது, குடிநீர் பிரச்னை குறித்து மருத்துவ நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அவரிடம் எடுத்துரைத்தனர். 'உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்,'என, முதல்வர் தெரிவித்து சென்றார். புதிய திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், ஊட்டி அரசு தமிழக விருந்தினர் மாளிகையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் எம்.பி., ராஜா தலைமையில், அரசு தலைமை கொறடா ராமசந்திரன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்திற்கு பின், நீலகிரி எம்.பி., ராஜா நிருபர்களிடம் கூறுகையில்,''ஊட்டியில் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய அரசு மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை நிலவும் நிலையில், நோயாளிகள்; டாக்டர்கள்; மாணவர்களின் நலன் கருதி, மருத்துவ கல்லுாரிக்கான குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்,'' என்றார்.
தினசரி 8 லட்சம் லிட்டர் தேவை
மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி செல்வகுமார் கூறுகையில், ''ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தினசரி, 8 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மாநில அரசு ஒதுக்கியுள்ள, 23 கோடி ரூபாய் நிதி வாயிலாக, ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் உள்ள 'எர்தன் டேம்' பகுதியில், புதிய திட்டத்தின் கீழ் நீரேற்று மையம் அமைத்து, 4 கி.மீ., துாரம்வரை குழாய் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லப்படும். அங்கு தேவையான இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து, தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது,'' என்றார்.