உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 2,500 மெட்ரிக் டன் உரம் தேவைக்கேற்ப கையிருப்பு; விவசாயிகள் பயன் பெற அழைப்பு

2,500 மெட்ரிக் டன் உரம் தேவைக்கேற்ப கையிருப்பு; விவசாயிகள் பயன் பெற அழைப்பு

ஊட்டி; நீலகிரி விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்க, 2,500 மெட்ரிக் டன் உரங்கள் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் தேயிலை தோட்டங்களில் நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களை பராமரிக்க விவசாயிகள் ஆயத்தமாகியுள்ளனர். சிறு விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் 'காம்ப்ளக்ஸ்' உரங்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் குறித்து, உர கட்டுப்பாட்டு துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது .வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) லாவண்யா ஜெயசுதா கூறுகையில்,''மாவட்டத்தில் பருவ மழை நன்றாக பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி போதிய அளவில் இல்லாததால் நீலகிரி தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அனைத்து கிளைகள் மற்றும் தனியார் உரக்கடைகளிலும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அக் ., மாதத்தில் மட்டும், 'யூரியா, 1,264 மெட்ரிக் டன்; டி.ஏ.பி. 458 மெட்ரிக் டன்; பொட்டாஷ் 810 மெட்ரிக் டன்,' மொத்தம், 2.532 டன் என உரங்கள் பெறப்பட்டு தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக, 247 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 903 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் விவசாயிகள் பயன் பெறும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை