மாவட்டத்தில் 73.6 எக்டர் பரப்பளவில் ஸ்டாபெரி சாகுபடி: விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம்
கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில்: மாவட்டத்தில், தேயிலை விவசாயத்தில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள், இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளார்கள் இந்த விவசாயத்தை நம்பியுள்ளனர். கட்டுப்படியான விலை கிடைக்காததால், விவசாயிகள் தேயிலை தோட்டங்களை மாற்றி அமைத்து, இந்த மண்ணிற்கு உரித்தான பயிர்களை சாகுபடி செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். அதன்படி தயார் செய்த நிலங்களில் கொய்மலர், உரு ளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் மற்றும் காலிபிளவர் போன்ற பயிர்கள் பயரிட்டு வருகின்றனர். உரம், பூச்சிக் கொல்லி மருந்து உட்பட, இடுபொருட்களின் விலை அதிகமாக உள்ளதால், போதிய வருவாய் கிடைக்காமல் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஒரே பயிரை தொடர்ந்து பயிர் செய்து வருவதால், மண் வளம் பாதித்து, பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், மாற்று பயிராக ஸ்டாபெரி பயிரிட விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். 3 மாதங்களில் தயார் ஸ்டாபெரி பயிரிட்ட, மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராகிறது. இந்த பழங்களில் தாதுக்கள், விட்டமின்களுடன், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. இதனால், இங்கு விளையும் ஸ்டாபெரிக்கு, சந்தையில் நல்ல மவுசு உள்ளதால், விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கிறது. நீலகிரி மாவட்டத்தில், ஸ்டாபெரி விவசாயம் லாபகரமாகவும், மலை காய்கறிகளுக்கு மாற்றாகவும், உள்ளூர் சந்தைகளில் வரவேற்பும் பெற்று வருகிறது. இதனால், கடந்த, நான்கு ஆண்டுகளாக மாவட்டத்தில், 73.6 எக்டர் பரப்பளவில் ஸ்டாபெரி சாகுபடி செய்து, விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர்.