மூடப்பட்ட இடங்களில் மீண்டும் 20 மதுக்கடைகள் திறக்க கடும் எதிர்ப்பு! போராட்டம் நடத்த முடிவு
ஊட்டி : நீலகிரியில், ஆறு தாலுகா பகுதியில் மூடப்பட்ட இடங்களில் மீண்டும், 20 டாஸ்மாக் மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் எடுத்த முடிவால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் ஆகிய ஆறு தாலுகா பகுதிகளில் கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, 'பிரதான சாலை, மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வரும் இடங்கள்,' என, பார்க்கும் இடங்களில் எல்லாம், 150 டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது.இதனால், 'அன்றாட பணிக்கு செல்லும் மது பிரியர்கள்; 25 வயது முதல், 35 வயதுள்ள இளைஞர்கள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள்,' என, மது பழக்கத்தால் சீரழிவுகள் ஆங்காங்கே ஏற்பட்டது. இதனையடுத்து, 'இடையூறு உள்ள இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்,' என, வலியுறுத்தி, பொதுநலம் மற்றும் பொதுமக்கள் சார்பில், மாநில முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு ஏராளமான புகார் மனுக்கள் அனுப்பப்பட்டது. கடைகளை மூட போராட்டம்
மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை இல்லாததால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் மனு அளித்து, அந்தந்த பகுதிகளில் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் எதிரொலியாக டாஸ்மாக் மதுக்கடைகளில் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது, மாவட்ட முழுவதும், 77 டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. தினசரி வருமானம், சராசரியாக, 1.80 கோடி ரூபாயாகும். விசேஷ நாட்களில், 2 கோடி ரூபாயை எட்டிவிடும். 20 கடைகள் திறக்க மும்முரம்
இந்நிலையில், சமீபத்தில் வாய்மொழி உத்தரவாக, 'ஒவ்வொரு டாஸ்மாக் மதுக்கடைகளின் வருமானத்தை கணக்கிட்டு, வருவாய் குறைவாக உள்ளது; வருமானத்தை அதிகரிக்க வேண்டும்,' என, டாஸ்மாக் நிர்வாகம் 'டார்கெட்' நிர்ணயித்துள்ளனர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.இதற்கிடையே, ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் முதற்கட்டமாக, 20 கடைகள் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்களின் மன நிலையை பார்த்து இன்னும் சில கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்து, டாஸ்மாக் தலைமைக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் இதற்கு பச்சை கொடி காட்டியுள்ளது. ஆரம்பத்திலேயே தடுக்கணும்
ஏற்கனவே, டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு மூடப்பட்ட இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் அங்கு சென்று மக்களின் மனநிலையை அறிந்து, கடைக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். சில இடங்களில் இப்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், 'எப்படியாவது, 20 மதுக்கடையை மீண்டும் திறக்க வேண்டும்,' என, சம்மந்தப்பட்ட துறையினர் உறுதியாக உள்ளனர்.பொதுநல அமைப்பினர் கூறுகையில், 'சிறிய மாவட்டமாக உள்ள நீலகிரியில் தற்போது செயல்பட்டு வரும், 77 டாஸ்மாக் மதுக்கடைகளே அதிகம், இதை குறைக்க வேண்டும். என, மாநில முதல்வர், மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மூடப்பட்ட இடங்களில் மீண்டும் மதுக்கடையை திறக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். திறக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களை ஒன்றுத்திரட்டி போராட்டம் நடத்தி மதுக்கடை வர விடாமல் தடுக்க முடிவெடுத்துள்ளோம்,' என்றனர்.
மக்கள் எதிர்ப்பு!
மசினகுடி பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடையால் மது பிரியர்கள் குடித்து விட்டு காலி மதுபாட்டில்கள், தின்பண்டங்களை வனத்தில் வீசி எறிவதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுசூழல் ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் எதிர்ப்பால் அந்த கடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. தற்போது, அங்கு டாஸ்மாக் மதுக்கடை திறக்க இடத்தேர்வு நடந்திருப்பதை அறிந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்க உள்ளனர்.