| ADDED : பிப் 23, 2024 11:11 PM
ஊட்டி;'இயற்கையை பாதுகாப்பதில் மாணவர்கள் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்,' என, தெரிவிக்கப்பட்டது.ஊட்டியில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில், நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை தேர்ந்தெடுக்கப்பட்ட, ஐந்து பள்ளிகளில் இருந்து, 50 மாணவர்களுக்கு, மூன்று நாள் இயற்கை கல்வி வனவியல் களப்பயணம் துவங்கியது. தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் வரவேற்றார்.இதற்கு தலைமை வகித்து, மாவட்ட வன அலுவலர் கவுதம், களப்பயணத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''சமூகத்தில் சிறந்த சேவை செய்ய கல்விதான் முக்கியம். எந்த துறையிலும் ஆர்வத்துடன் கல்வி பயின்றால், வெற்றி நிச்சயம். எதிர்காலத்தில், மாணவர்கள்தான் இயற்கை பாதுகாப்பின் முழு நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளது,''என்றார். சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு கருத்தாளராக பங்கேற்று பேசுகையில், ''உயிர்ச்சூழல் பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு முக்கியமானது. சேவை மனப்பான்மை கொண்ட இளைய சமூகம் இயற்கை பாதுகாப்பதில் முன்வர வேண்டும். பறவைகள் மற்றும் விலங்குகள் அழியாமல் பாதுகாக்க, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, கேர்ன்ஹில் காப்பு காட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்களுக்கு, தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பல்லுயிர் பெருக்கம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை, நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப் படை செய்திருந்தது.