ஊட்டி அரசு கலை கல்லுாரியில் முதுநிலை படிப்பு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு
ஊட்டி; ஊட்டி அரசு கலை கல்லுாரியில், 2025- - 26ம் கல்வி ஆண்டில் முதுநிலை படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி அரசு கலை கல்லுாரி முதல்வர் ராமலட்சுமி அறிக்கை:ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில், 2025 - -26ம் கல்வியாண்டில் முதுநிலை படிப்புகளில் சேர , www.tngasa.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூலை 15 ம் தேதியாகும். முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும் பொருட்டு ஊட்டி அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் உதவி மையத்தை அணுகலாம். விண்ணப்ப கட்டணம், 60 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகள் பதிவு கட்டணம், 2 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது ஜாதி சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஊட்டி அரசு கலை கல்லுாரியில் முதுகலையில் உள்ள பாடப்பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதுகலை பாட பிரிவுகள்
எம்.ஏ., தமிழ், எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.ஏ., பொருளாதாரம், எம்.காம்., எம்.காம் (சி.ஏ.), எம்.காம் (ஐ.பி.), எம்.எஸ்.சி., தாவரவியல்; எம்.எஸ்.சி., வேதியியல்; எம்.எஸ்.சி., விலங்கியல்; எம்.எஸ்.சி., கணிதம்; எம்.எஸ்.சி., இயற்பியல்; எம்.எஸ்.சி., வன விலங்கு உயிரியல் மற்றும் எம்.எஸ்.சி., கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.