வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதி; இரண்டாவது நாளாக போராட்டம்
ஊட்டி : கோக்கால் பகுதியில், இடிக்கப்பட்ட பள்ளி கட்டடங்கள் இதுவரை கட்டப்படாததால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஊட்டி அருகே உள்ள கோக்கால் பகுதியில் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் கோக்கால், கன்னேரிமுக்கு, துாபகண்டி, கக்கஞ்சிநகர், செலக்கல் உள்ளிட்ட, 6 கிராமங்களை சேர்ந்த, 290 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், மோசமாக இருந்த வகுப்பறை கட்டடங்கள் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்டப்படும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், இதுவரை கட்டடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், 6,7,8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கான வகுப்பறை இல்லாததால் திறந்தவெளியில் அமர்ந்து படித்து வருகின்றனர். மழை காலங்களில் மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுடன் அமர வைக்கும் நிலை தொடர்கிறது. தற்போது, காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள், நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ள நிலையில், கோக்கால் பள்ளியில் படிக்கும், 290 மாணவர்களை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.இதை தொடர்ந்து, ஊட்டி ஆர்.டி.ஓ., மகராஜா, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இரண்டாவது நாளாக நேற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.