உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்ற சர்வே பணி துவக்கம்

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்ற சர்வே பணி துவக்கம்

குன்னுார்: குன்னுாரில் நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே பணி துவங்கியது. குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட புனித அந்தோணியார் தேவாலய எல்லை பகுதியில், அரசுக்கு சொந்தமான இடம் உட்பட மவுன்ட் ரோடு, அம்மா மருந்தகம் வரை பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற கோரி, கன்டோன்மென்ட் தன்னார்வலர் வினோத்குமார் குன்னுார் கூடுதல் கலெக்டரிடம் மனு அளித்திருந்தார். இந்த ஆக்கிரமிப்புகளால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதோடு, பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படுவதாகவும் விபத்து ஏற்படும் முன் இவற்றை அகற்றவும் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கடந்த, 12ல் ஐகோர்ட் உத்தரவில், நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் பேரில், குன்னுார் கூடுதல் கலெக்டர் காஞ்சன் சவுத்திரி உத்தரவின் பேரில், சர்வேயர் கோபி, வி.ஏ.ஓ ரெவின், வருவாய் உதவியாளர் சுரேஷ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்து அளவீடு மேற்கொண்டனர். குன்னுார் முழுவதும் உள்ள நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !