தேயிலை ஏலத்தில் ஏற்றம்; மொத்த வருவாய் அதிகரிப்பு
குன்னுார்; தென் மாநில தேயிலை ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 44.04 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜன., மாத பனி பொழிவிற்கு பிறகு, மார்ச், ஏப்., மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். நடப்பாண்டு வழக்கத்திற்கு மாறாக மழையின் தாக்கம் அதிகரித்தது. இதனால், பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து, தேயிலை துாள் உற்பத்தியும் உயர்ந்தது.தென் மாநிலங்களில், 4 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 44.04 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, இந்த ஏலத்தில், 57 லட்சம் ரூபாய் கூடுதலானது.தென் மாநில அளவில் கடந்த மாத இறுதியில் நடந்த, 17 வது ஏலத்தில் மொத்த வருவாய், 23.45 கோடி ரூபாய் இருந்த நிலையில், தற்போது, 20.59 கோடி ரூபாய் ஏற்றம் கண்டு, 44.04 கோடி ரூபாயாக உயர்ந்தது. 21வது ஏலம்
குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த, 21வது ஏலத்தில், '20.07 லட்சம் கிலோ இலை ரகம்; 5.10 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 25.17 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. '16.68 லட்சம் கிலோ இலை ரகம்; 3.74 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 20.42 லட்சம் கிலோ விற்பனையானது. 81.14 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 106 ரூபாய் என இருந்தது; சராசரி விலையில், 3 ரூபாய் வரை சரிந்தது. மொத்த வருமானம், 21.65 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 30 ஆயிரத்து 885 கிலோ வரத்து அதிகமானது; விற்பனையில், 2.76 லட்சம் கிலோ அதிகரித்தது; ஒரே வாரத்தில், 2.24 கோடி ரூபாய் மொத்த வருவாய் உயர்ந்தது. 'டீசர்வ் ஏலம்'
நீலகிரி மாவட்டம், கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள் டீசர்வ் மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில், 21வது ஏலத்திற்கு, 2.66 லட்சம் கிலோ வந்ததில், 1.93 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த ஏலத்தை விட, 96 ஆயிரம் கிலோ வரத்தும், 59 ஆயிரம் கிலோ விற்பனையும் அதிகரித்தது. கிலோவிற்கு, 3 ரூபாய் வீழ்ச்சி கண்டது. 1.22 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த வாரத்தை விட, 4 லட்சம் மொத்த வருவாய் சரிந்தது.கோவை ஏல மையத்தில், இந்த ஏலத்தில், 5.61 லட்சம் கிலோ வந்ததில், 4.25 லட்சம் கிலோ என 75.76 சதவீதம் விற்பனையானது. சராசரி விலை, 129.06 ரூபாய் என இருந்தது; 4.25 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது; ஒரே வாரத்தில், 1.45 கோடி ரூபாய் மொத்த வருமானம் சரிந்தது. கொச்சி ஏல மையத்தில், 12.42 லட்சம் கிலோ வந்ததில், 10.49 லட்சம் கிலோ என 84.46 சதவீதம் விற்பனையானது. சராசரி விலை, 161.29 ரூபாய் என இருந்தது. 16.92 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. 18 லட்சம் ரூபாய் சரிந்தது.