உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலை விவசாயிகள் வாரிசு கல்வி உதவி தொகை காலக்கெடு நீட்டிக்க வலியுறுத்தல்

தேயிலை விவசாயிகள் வாரிசு கல்வி உதவி தொகை காலக்கெடு நீட்டிக்க வலியுறுத்தல்

குன்னுார் : 'தேயிலை வாரியத்தின் சார்பில், தேயிலை விவசாயிகளின் வாரிசுகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியன், குன்னுார் தேயிலை வாரிய செயல் இயக்குனருக்கு அனுப்பிய மனு: மத்திய வர்த்தக அமைச்சகம், தேயிலை வாரியத்தின் சார்பில், சிறு தேயிலை விவசாயிகளின் வாரிசுகளுக்கு முதல் வகுப்பு முதல் உயர்கல்வி வரை கல்வி உதவி தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. தேயிலை வாரியத்தின் அறிவிப்பு தெளிவாக இல்லை. இந்த அறிவிப்பு தேயிலை வாரியத்தை திருப்திப்படுத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக உள்ளது.இது தொடர்பாக சிறு தேயிலை விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தேயிலை வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லுார் அளவில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளின் அனைத்து வாரிசுகளும், அறிவிக்கப்பட்ட தொகையை பெற தகுதி உள்ளதா என்பதை தெளிவு படுத்த வேண்டும். தகுதிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் உள்ள தகுதி குறித்து தெரிவிக்க வேண்டும். கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் குறித்தும், இந்த அறிவிப்புகள் சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். இந்த நல திட்டங்கள் குறித்து, ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நாளிதழ்களில் தகுதி நிபந்தனைகள் குறித்து முழு விபரங்களை வெளியிட வேண்டும். மேலும், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட, 30 நாட்கள் கால அவகாசம், வருவாய் சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மிகவும் குறைவாக உள்ளது. எனவே, காலக்கெடு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி