சேதமடைந்த சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி; அதிருப்தியில் உள்ளூர் மக்கள்
கூடலுார்; கூடலுாரில் சேதமடைந்த சாலைகளில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்வதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள், கூடலுார், ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிகளவில் வந்து செல்கின்றனர். இப்பகுதி கேரளா கர்நாடக இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது.இச்சாலையில், ஊசிமலை முதல் கூடலுார் தொரப்பள்ளி வரையிலான இடைப்பட்ட, 16 கி.மீ., துாரம் சாலை சேதமடைந்து, சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கிய சம்பவமும் நடந்து வருகிறது. இதனால், இச்சாலையை உடனடியாக சீரமைக்க, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். உள்ளூர் மக்கள் அதிருப்தி
இதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 'நிதி ஒதுக்கிய பின் பணிகள் துவங்கப்படும்' என, கடந்த சில ஆண்டுகளாக நெடுஞ்சாலை துறையினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பெய்து வரும் பருவமழையில், சாலையில் உள்ள குழிகளில், மழை நீர் குளம் போல் தேங்கி, சாலை தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. ஓட்டுனர்கள் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. தற்போது பெய்து வரும் பருவ மழையில் சாலை மேலும் சேதமடைந்துள்ளன. இச்சாலையை சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.இந்நிலையில், 'சேதமடைந்த சாலையில் சவப்பெட்டி வைக்கும் போராட்டம் நடத்தப்படும்' என, அரசியல் கட்சி நிர்வாகிகள் அறிவித்தனர். தொடர்ந்து, நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்த பகுதிகளில் நேற்று, மண் கலந்த ஜல்லி கலவை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதனால், அதிருப்தி அடைந்த மக்கள் கூறுகையில், ' கூடலுாரில் சேதமடைந்து வரும் சாலைகளை நிரந்தரமாக சீரமைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.