நுாற்றாண்டிற்கு முன்பு வியக்க வைத்த பாங்கி தபால்; மலை பகுதியில் பிரமிக்க வைத்த தொடர் ஓட்டசேவை! இன்று உலக தபால் தினம்
குன்னுார்; இன்று உலக தபால் தினம் கொண்டாடும் நிலையில், மலையில் சேவை துவங்கிய காலகட்டத்தில், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை 'பாங்கி தபால்' எனப்படும் முறை பின்பற்றி, 5:10 மணி நேரத்தில் தபால்கள் கொண்டு வரப்பட்டுள்ள வரலாறு நினைவுகள் பிரமிக்க வைக்கிறது. நீலகிரி மாவட்டத்தின் முதல் தபால் நிலையம், 1826ல் ஊட்டியில் துவங்கப்பட்டது. 1842ல் வெலிங்டன் தபால் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. பிறகு 1847ம் ஆண்டுக்குள் குன்னுார், கோத்தகிரி தபால் நிலையங்கள் அமைக்கப்பட்டன. 1867ல் கூடலுார்; 1874ல் சேரம்பாடி, தேவாலா; 1877 ல் நெலாக்கோட்டையில் தபால் அலுவலகங்கள் துவங்கப்பட்டன. இந்த காலங்களில் 'பாங்கி தபால்' எனப்படும் முறையில் தபால்காரர்கள் தோளில் தபால் பைகளை சுமந்து ஓடி சென்று வழங்கும் முறை பின்பற்றப்பட்டது. 1878ம் ஆண்டிற்கு பிறகு குதிரைகள், 1899க்கு பிறகு ரயில் என தபால் சேவை மாறியது. வரலாற்று ஆய்வாளர் வசந்தன் கூறுகையில், ''ஆரம்பத்தில், பாங்கி தபால் எனப்படும் முறையில், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை, 25 மைல்கள், 5:10 மணி நேரத்தில், 9 குழுக்களை சேர்ந்த தபால்காரர்கள் 'ரிலே' போன்று தொடர் ஓட்டமாக ஓடி வந்து, தபால்களை கொண்டு வந்து சேர்த்துள்ளனர். ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இந்த குழு நான்கரை மணி நேரத்தில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். வனவிலங்குகள் பாதிப்பை எதிர்கொள்ள, தபால்காரரின் இடது கையில் சலங்கை ஒலி சப்தம் கொண்ட ஈட்டி வைத்திருப்பர். வலது தோளில் தபால் மூட்டை களை சுமந்து சென்றுள்ளனர். ஒரு குழு தபால் காரர்கள், 3 மைல் துாரம் வரை ஓடி, அடுத்த குழு தபால்காரர்களிடம் ஒப்படைக்கும் பாங்கி தபால் முறை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து, சிஸ்பாரா, நிலம்பூர், சைலன்ட் வேலி, அப்பர் பவானி வரையிலும், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து அங்களா, மாயார், பூதநத்தம், செம்மநத்தம், மாவனல்லா பெலிகல் (உல்லத்தி) மார்லிமந்து வழியாக ஊட்டிக்கு தபால்கள் கொண்டுவரப்பட்டுள்ளது,'' என்றார். இத்தகைய வரலாற்று நினைவு கள் இன்றளவும் மலை மாவட்ட மக்களின் மனதில் அசைபோடப்பட்டு வருகிறது.