| ADDED : பிப் 14, 2024 11:53 PM
ஊட்டி: கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை யொட்டி, நீலகிரியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நினைவு கூறும் பொருட்டு கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். நடப்பாண்டுக்கான தவக்காலம் சாம்பல் புதனுடன் நேற்று துவங்கியது.ஊட்டி சேரிங்கிராசில் உள்ள நுாற்றாண்டு பழமை வாய்ந்த இருதய ஆண்டவர் ஆலயத்தில் காலை, 7:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை தாங்கி தவக்கால திருப்பலியை நிறைவேற்றினார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு காய்ந்த குருத்தோலைகளை எரித்து சாம்பலாக்கி, அதனை மந்திரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நெற்றியில் சிலுவை அடையாளம் இடப்பட்டது.* ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் பங்கு குரு செல்வ நாதன், உதவி பங்கு குருக்கள் பிரடெரிக், ஞான செல்வம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. * ஊட்டி சி.எஸ்.ஐ., துாய திரித்துவ ஆலயத்தில் பங்கு தந்தை ஜெர்ரி ராஜ்குமார் தலைமையிலும், புனித தாமஸ் ஆலயத்தில் பங்கு தந்தை ஜெரேமியா ஆல்பிரட் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. * புனித ஸ்டீபன் ஆலயம், புனித வெஸ்லி ஆலயம், காந்தள் குருசடி ஆலயம், பிங்கர்போஸ்ட் புனித திரேசன்னை ஆலயம் உட்பட பல்வேறு ஆலயங்களில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.