ஊட்டி ஏரியில் துார் வாரும் பணி துவக்கி வைத்த அமைச்சர்
ஊட்டி : ஊட்டி ஏரியை, 7.50 கோடி ரூபாயில் துார் வரும் பணியை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலமாக ஊட்டி படகு இல்லம் திகழ்கிறது. இதன் ஏரியில் மண், சகதி அதிகரித்துள்ளதால் துார்வார திட்டமிடப்பட்டது. இந்நிலையில், மாநில செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ஊட்டி ஏரியை துார்வாரும் பணியை நேற்று துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறுகையில்,'' சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஊட்டி ஏரியை துார்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது. பணிகளை விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 24 எக்டர் பரப்பளவு கொண்ட ஏரியை முழுவதும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், ஊட்டி ஏரிக்கு நீர் வரக்கூடிய கால்வாயை சுத்தமாக துார்வாரும் வகையில், 1.20 கோடி ரூபாயில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார். நிகழ்ச்சியில், அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா மற்றும் பொது பணி துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.