கெத்தை வனத்திற்குள் சென்ற ஒற்றை கொம்பன்
குன்னுார்,; குன்னுாரில் இருந்து, ஊட்டி தொட்டபெட்டா மலை உச்சியில் முகாமிட்ட ஒற்றை கொம்பன், தற்போது கெத்தை வனத்திற்குள் சென்றது.குன்னுார்- -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், சில ஆண்டுகளாக கொம்பன், என அழைக்கப்படும் ஒற்றை கொம்பன் யானை சுற்றித்திரிந்தது. பர்லியார், ஹில்குரோவ், சிங்காரா, வடுகதோட்டம், மரப்பாலம், ரன்னிமேடு, காட்டேரி பகுதிகளில் மட்டுமே உலா வந்த இந்த யானை, குன்னுார் மலைபாதையில் இருந்து இடம் பெயராமல் இருந்தது.கடந்த மே மாதம் துவக்கத்தில், கரும்பாலம், கரோலினா வழியாக பழ தோட்டத்தில் தஞ்சமடைந்த யானை, இரவோடு இரவாக ஊட்டி தொட்டபெட்டா மலைக்கு சென்றது. வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், பார்சன்ஸ்வேலி வழியாக எமரால்டு குடியிருப்பு பகுதிக்கு சென்று முகாமிட்டது.நேற்று முன்தினம் எமரால்டிலிருந்து நகர்ந்து எடக்காடு முக்கிமலை தேயிலை தோட்டம் வழியாக வந்து குந்தா மின்வாரிய அலுவலகத்தில் நுழைந்தது. மின்வாரிய ஊழியர்கள், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். 50க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு, யானையை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, துானேரி கிராமத்திற்குள் நுழைந்து அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்த யானை அதிகாலையில், ஓணிக்கண்டி வழியாக கெத்தை வனத்திற்குள் சென்றது.வனத்துறையினர் கூறுகையில், 'இந்த யானையை விரட்டினால் மீண்டும் அதே இடத்திற்கு வருகிறது. அதன் போக்கிலேயே விட்டு கண்காணித்து வந்தோம். குன்னுாரில் இருந்து, 26 கிராமங்களை தாண்டி எமரால்டுக்கு சென்றுள்ளது. அங்கிருந்து வனப்பகுதி வழியாக கேரள எல்லைக்கு செல்ல வாய்ப்புள்ளது. இந்த யானைக்கு உள்ளூர் மக்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த கூடாது,' என்றனர்.