கூடலுார்:முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடரும் கடும் வறட்சியால், புலி, யானை உட்பட பிற உயிரினங்களுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியது. நடப்பாண்டு தொடரும் பனி பொழிவு, ஏமாற்றி வரும் கோடை மழையால், வனப்பகுதியில் கோடை வெப்பம் தீவிரமடைவதற்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், தாவரங்கள் கருகியும், மரங்களில் இலைகள் உதிர்ந்தும் வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுகிறது.வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யானை, காட்டெருமை, மான் போன்ற தாவர உண்ணிகள் மற்றும் புலி உட்பட பிற விலங்குகள் உணவு; குடிநீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன. சில உயிரினங்கள் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுதீயில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் உருவாகி வருகிறது. தொட்டிகளில் தண்ணீர்
இந்நிலையில், கடும் வறட்சியான பகுதிகளில், வனத்துறையினர் வாகனங்கள் வாயிலாக தண்ணீர் எடுத்து சென்று, தொட்டிகளில் சுழற்சி முறையில் ஊற்றி, வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். எனினும், வனப்பகுதி முழுமைக்கும் தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மறுபுறம், மரங்கள்; செடிகளில் இலை உதிர்ந்து, போதிய பசுந்தீவனம் கிடைக்காமல் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காட்டு யானைகள், போதிய உணவு இல்லாமல் உடல் மெலிந்து காணப்படுகிறது. கோடை மழை அவசியம்
இதே நிலை தொடர்ந்தால், அவைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிக மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். இதனை நாள்தோறும் கண்காணிக்கும் வனத்துறையினர் கவலை அடைந்துள்ளனர். கோடை மழையை எதிர்பாத்து பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'கோடை காலங்களில் வனவிலங்குகள், குறிப்பாக யானைகள், வறட்சியின் சூழலுக்கு ஏட்ப உணவு முறையை மாற்றி கொள்ளும் தன்மை கொண்டவை. மரப்பட்டை, காய்ந்த புற்களை உண்ணுவதுடன் தண்ணீர் கிடைக்கும் பகுதிகளில் முகாமிட்டிருக்கும். கடும் வறட்சியால் உடல் பாதிக்கும் போது, இடம்பெயர்ந்து செல்வதிலும் சிரமம் ஏற்படும். வனப்பகுதியில் ஆய்வு செய்து, யானைகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்று சிமென்ட் தொட்டிகளில் ஊற்றி வருகிறோம். எனினும், வெப்பம் காரணமாக, யானை, புலி உட்பட பிற விலங்குளின் பாதிப்புகளை தடுக்க முடியாத சூழல் உள்ளது. மழை பெய்து, வனப்பகுதி பசுமைக்கு மாறும்போது இந்நிலை மாறும். இதனால், கோடை மழை எதிர்பார்த்து காத்து உள்ளோம். இம்மாதம் இறுதியில் வரும் என எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.