உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி! இதுவரை 171 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

நீலகிரியில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி! இதுவரை 171 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

ஊட்டி: நீலகிரியில் பள்ளி செல்லா, 2,479 மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டு, 171 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறை வழிகாட்டுதல் படி, 2026--27ம் கல்வியாண்டில், 100 சதவீத மாணவர் சேர்க்கை உறுதி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், 6 வயது முதல், 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறியும் சிறப்பு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அதில், பள்ளிக்கு தொடர்ந்து, 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளிக்கு வராத குழந்தைகள்; இதுவரை பள்ளியில் சேராத பள்ளி வயது குழந்தைகள்; 8 ம் வகுப்பு வரை தொடக்க கல்வியை முழுமையாக முடிக்காத மாணவர்கள்; ஒரு மாதத்தில்,15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருப்பவர்கள் உள்ளிட்டோர் கண்டறியப்பட்டு வருகின்றனர். தவிர, இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள்; வறுமை மற்றும் கட்டாயத்தின் பேரில் வேலைக்கு அனுப்பப்படும் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள்; குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள்; மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆகியோர் மீது சிறப்பு கவனம் செலுத்தி பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 171 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு குறிப்பாக, பஸ் நிலையங்கள், தேயிலை தோட்டங்கள், குடிசை பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் இந்த ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில், உதவி திட்ட அலுவலர் துரை மூர்த்தி மேற்பார்வையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகஜோதி தலைமையில் இதற்கென குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் துறை, சமூக பாதுகாப்பு 'சைல்டு லைன்' அலுவலர்கள் மற்றும் போலீஸ் துறையுடன் முறையாக இணைந்து குழுக்களாக வீடு, வீடாக சென்று இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்பு கொள்ள எண்கள் அறிவிப்பு...

மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில்,'மாவட்டத்தில் இதுவரை , 2,479 மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அதற்கான செயலியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 171 மாணவர்கள் உடனடியாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அருகில் உள்ள பள்ளிகளில் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கள் பகுதிகளில் பள்ளி செல்லாத குழந்தைகள் யாரேனும் இருந்தால் மாவட்ட கட்டுப்பாட்டு அறை, 0423--2966034 மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், 9788859009 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்