உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கண் மருத்துவர் இல்லை! கிராம மக்கள், தோட்ட தொழிலாளர்கள் அவதி

நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கண் மருத்துவர் இல்லை! கிராம மக்கள், தோட்ட தொழிலாளர்கள் அவதி

பந்தலுார்; நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கண் மருத்துவர் இல்லாததால், மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், 5 அரசு மருத்துவமனைகள் மற்றும், 38 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றன. அதில், கூடலுார் மற்றும் பந்தலுார் அரசு மருத்துவமனைகளில், போதிய டாக்டர் இல்லை. இதனால், விபத்து மற்றும் வனவிலங்கு தாக்குதலில் பாதிக்கப்படும் நோயாளிகள், ஊட்டி அல்லது கோவை மற்றும் கேரளா மாநில மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் அவலம் தொடர்கிறது.

ஐந்து டாக்டர்கள் இடமாற்றம்

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில், 5- கண் டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கிராம பகுதிகளில், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தி, கண் நோய் பாதிப்புகள் இல்லாத நிலையை ஏற்படுத்தி வந்தனர். இதற்காக மாவட்டத்தில் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் செயல்படுத்தப்பட்டு, முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.ஆனால், தற்போது மாவட்டத்தில் பணியாற்றிய, 5- டாக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளர் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டு, விடுவிக்கப்படாமல் பணியாற்றி வருகிறார்.

ஆண்டுக்கு 500 பேருக்கு கண்புரை

கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் கூறியதாவது,''நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் கண் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் கண் புரை பாதிக்கப்பட்டவர்களுக்கு, 500 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவர்களுக்கு பார்வை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அரசு இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துவதற்கு பதில், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தனியார் மருத்துவமனைகள் மூலம், கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு, அந்தந்த மருத்துவமனைகள் மூலம் கண் கண்ணாடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஏழை மக்கள் மற்றும் பழங்குடியினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கண் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு, இலவச முகாம்கள் நடத்தி பார்வை இழப்பை சரிப்படுத்த அரசு முன் வரவேண்டும்,'' என்றார்.சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராஜசேகர் கூறுகையில், ''தற்போது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய அனைவரும், பணியிட மாற்றம் பெற்று சென்று விட்ட நிலையில், கண் டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், கண் மருத்துவர்களை நியமனம் செய்தால் பயனாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ