கட்டுமான பணிக்காக குப்போட்டா இயக்கம்: மூன்று பேர் கைது
கோத்தகிரி; கோத்தகிரியில் கட்டுமான பணிக்காக, அனுமதியின்றி 'குப்போட்டா' இயக்கப்பட்ட வழக்கில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.'நீலகிரி மாவட்டத்தில், விவசாய பணிகள் தவிர, இதர எந்த பணிகளுக்கும் பொக்லைன், குப்போட்டா இயக்க முறையான அனுமதி பெற வேண்டும்,' என்ற கோர்ட் உத்தரவு நடைமுறையில் உள்ளது. இருப்பினும், பல பகுதிகளில், விவசாய பணி என்ற பெயரில், கட்டுமான பணிக்காக, பொக்லைன் மற்றும் குப்போட்டா (மினி பொக்லைன்) இயக்கப்படுவது தொடர்கிறது.இந்நிலையில், கோத்தகிரி டானிங்டன் பகுதியில், அனுமதி இல்லாமல், கட்டுமான பணிக்காக குப்போட்டா இயக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில், கிராம உதவியாளர் அஜ்மீர் காஜா உட்பட, வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதி இல்லாமல் குப்போட்டா இயக்கப்பட்டதுடன், பேரிடர் ஏற்படும் வகையில் செங்குத்தான மலைப்பகுதியை குடைந்து, மண்ணை திருடி சென்றதும் தெரியவந்தது.தொடர்ந்து, மண் ஏற்றப்பட்டிருந்த டிராக்டர் மற்றும் மினி பொக்லைன் பறிமுதல் செய்து, கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் சபீர் கான் அளித்த புகாரின்படி, போலீசார் கனிம வள சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பணி உதவியாளர் ஆனந்த்,45, பொக்லைன் டிரைவர்கள் வேம்புராஜ், 28, மற்றும் பாலசுப்ரமணியன்,29, ஆகியோரை கைது செய்தனர்.