புலி தாக்கி பசுமாடு பலி; அதிர்ச்சியில் மக்கள்
கூடலுார்; கூடலுார் தேவர்சோலை அருகே புலி தாக்கி பசுமாடு பலியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூடலுார் தேவர்சோலை சர்கார்மூலா, கொட்டாய் மட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், உலா வரும் புலி, 20 மாடுகளை தாக்கி கொன்றுள்ளது. தொடர்ந்து, கடந்த மாதம், 8ம் தேதி முதல், ஐந்து இடங்களில் கூண்டு வைத்து புலியை பிடிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை புலி கூண்டில் சிக்கவில்லை. இந்நிலையில், 5ம் தேதி கொட்டாய் மட்டம் பகுதியில் புலி தாக்கி, செயதலுவி என்பவரின் கன்று குட்டி காயத்துடன் உயிர் தப்பியது. இந்நிலையில், சர்க்கார்மூலா பகுதியில் நேற்று முன்தினம், மேய்ச்சலுக்கு விட்டிருந்த அனுப் என்பவரின் பசுமாடு காணவில்லை. நேற்று, காலை புலி தாக்கி பசுமாடு இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வனச்சரகர் ராதாகிருஷ்ணன் வனவர் வீரமணி, வன ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து, புலியின் கால் தடத்தை வைத்து அதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூறுகையில், 'பசுமாடுகளை தாக்கி வரும் புலி, மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, கூண்டில் சிக்காத புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்,' என்றனர்.